
ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர். மறுபுறம் ஒரு கட்டத்தில் 155/2 என்ற வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தானை அடுத்த 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி மொத்தமாக சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடியாக விளையாடிய 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கி ஆட்டமிழந்தார். அவருடன் ஷுப்மன் கில் 16, விராட் கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 53, ராகுல் 19 ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதான வெற்றி பெற்று 3வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.