இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5ஆவது டெஸ்ட், ஜூலை 1 அன்று தொடங்குகிறது.
கடந்த வருடம் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. 4 டெஸ்டுகளின் முடிவில் 2-1 என முன்னிலை பெற்று அசத்தியது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது.
Trending
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5ஆவது டெஸ்ட் ரத்தானது. இதையடுத்து இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுடன் சேர்த்து ஐந்தாவது டெஸ்ட்டும் நடைபெறுகிறது.
இந்நிலையில் 5ஆவது டெஸ்ட் பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இந்த டெஸ்டை விளையாட ஆர்வமாக உள்ளோம். ஒரு டெஸ்டாக இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிகள் உள்ளன. கடந்த வருடம் விளையாடிய வீரர்கள் டெஸ்ட் தொடரை வெல்ல ஆவலாக உள்ளார்கள்.
இங்கிலாந்தில் டெஸ்டில் விளையாடுவது நல்ல அனுபவமாக இருக்கும். ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். தற்போது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கடந்த வருடம் இங்கிலாந்தில் நாம் விளையாடியபோது அந்த அணி சற்று பின்தங்கி இருந்தது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடியுள்ளார்கள். நம்முடைய அணியும் சிறப்பாக உள்ளது. நல்ல டெஸ்டாக இருக்கப் போகிறது. எனக்கு டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கப் பிடிக்கும். டெஸ்ட் விளையாடப் பிடிக்கும். இதற்குப் பயிற்சியளிக்கவும் பிடிக்கும். எனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now