
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் டிரெண்ட் ராக்கெட்ஸ் - ஓவல் இன்விசிபில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓவல் இன்விசிபில் அணிக்கு வில் ஜேக்ஸ் - டேவிட் மாலன் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் வில் ஜேக்ஸ் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ஜோர்டன் காக்ஸும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மாலன் அரைசதம் கடந்ததுடன் 53 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக டோனவன் ஃபெரீரா 27 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இன்னிங்ஸ் முடிவில் ஓவல் இன்விசிபில் அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியில் தொடக்க வீரர் டாம் பாண்டன் 6 ரன்களிலும், ஜோ ரூட் 12 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - டாம் அஸ்லப் ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.