
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழ்ந்து வரும் இந்தியா ஐசிசி தர வரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலித்து வருகிறது. அதே போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் 3ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணி ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய தரமான அணியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வரும் இந்தியா பெரும்பாலான ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக நாக் அவுட் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்ல போராடி வருகிறது.
அதே போல ஐபிஎல் தொடரை நடத்தும் பிசிசிஐ பல ஆயிரம் கோடிகளை வருமானமாக பெறுவதால் உலகின் இதர நாடுகளை காட்டிலும் மிகவும் பணக்கார வாரியமாக இருக்கிறது. அதனால் இந்திய அணிக்கு ஸ்பான்ஸர்ஷிப் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் பிரபல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து போட்டி போடுவது வழக்கமாகும். அந்த வகையில் தற்போது இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சி ஸ்பான்ஸராக உலகப் புகழ் பெற்ற அடிடாஸ் நிறுவனம் சமீபத்தில் பெரிய தொகையை செலுத்தி பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதை தொடர்ந்து லண்டனில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையிலிருந்து இந்திய அணியினர் அணிந்து விளையாடும் ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் கொடுக்க உள்ளது. பொதுவாகவே சாதாரண உடைகளில் பிரத்தியேக வேலைப்பாடுகளை செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு மிகப்பெரிய பிராண்டாக பார்க்கப்படும் அடிடாஸ் நிறுவனம் இந்திய அணிக்கு எந்த வகையான ஜெர்சியை உருவாக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.