IND vs AUS: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான மைதானத்தை மாற்றியது பிசிசிஐ!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
Trending
ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. புல் இல்லாமல் திட்டுகளாக காணப்படும் அவுட் பீல்டை இன்னும் 16 நாட்களில் தயார்படுத்துவது கடினம். அத்துடன் அடுத்த சில நாட்களில் மழை பெய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டியை தர்மசாலாவில் இருந்து மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு உகந்தவாறு இல்லை. எனவே இந்த போட்டி இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளது. தர்மசாலாவில் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு எந்த போட்டிகளும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now