
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மகளிர் அணி, வங்கதேச மகளிர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு பெர்னாடின் பெசுய்டன்ஹவுட் - சூஸி பேட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் பெர்னாடின் 26 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய சூஸி பேட்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.
இதற்கிடையில் அமிலியா கெர், சோஃபி டிவைன் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய மேதி க்ரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 பந்துகளில் 44 ரன்களைச் சேர்த்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூஸி பேட்ஸ் 61 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 81 ரன்களைக் குவித்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது.