
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நேபாள் அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அதேபோல் இறுதிக்கட்டத்தில் ஃபினிஷர் ரிங்கு சிங் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என்று அதிரடியாக 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதன் காரணமாகவே இந்திய அணி 200 ரன்களை கடந்தது. கடைசி ஓவரில் 25 ரன்கள் கிடைக்காமல் இருந்திருந்தால் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கும். மேலும் இது காலிறுதி போட்டி என்பதால் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி இருக்கும்.
இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா பத்து பந்துகளை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜிதேஷ் ஷர்மா யாரும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. சிவம் துபேவும் திணறவே செய்தார். இதைவிட முக்கியமாக எதிரில் விளையாடிய நேபாள் அணி அனுபவத்தில் மிகவும் சிறிய அணி. அதே சமயத்தில் மைதானத்தில் பவுண்டரி எல்லையும் சிறிதாக இருக்கிறது.