
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. 1987, 2011 வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் கோப்பை வெல்வதற்காக மொத்தம் 48 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அதில் எப்போதுமே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும். இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் நாக் அவுட் போட்டிகளில் கைவிடுவதும், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருப்பதும் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் சாதாரண இரு தரப்பு தொடர்களில் மிரட்டலாக செயல்படும் இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் ஏதேனும் ஒரு வகையில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.