
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், கேஎல் ராகுல் 40 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் அபாரமாக இருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 34 ரன்களையும், பில் சால்ட் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் டாம் பான்டன் 38 ரன்களையும், கஸ் அட்கின்சன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 214 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.