ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அணித்தேர்வு இருக்கும் - சூர்யகுமார் யாதவ்!
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு 2024இல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பினை இழந்த இந்திய அணியானது இம்முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று நோக்கத்துடன் இளம் வீரர்களை கொண்ட பலமான அணியை கட்டமைத்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி பங்கேற்று விளையாடி வருகிறது.
Trending
இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்த தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் ஆஃப்கானிஸ்தான் தொடர் என வெறும் 6 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணித்தேர்வு எந்த அடிப்படையில் நிகழும்? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வில் இருக்கும் வேளையில் தற்போது இளம் வீரர்களை கொண்ட அணிதான் விளையாடி வருகிறது.
எனவே இதே அணி டி20 உலக கோப்பை தொடருக்காக தேர்ந்தெடுக்கப்படுமா? அல்லது சீனியர் வீரர்களையும் இணைத்து டி20 அணி அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ், “இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 6 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது என்கிற கவலை வேண்டாம்.
ஏனெனில் இடையில் நமக்கு ஐபிஎல் தொடரில் அனைவருக்குமே 14 போட்டிகள் காத்திருக்கிறது. எனவே ஐபிஎல் தொடரில் வீரர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் உலககோப்பை அணித்தேர்வு இருக்கும் என்று கருதுகிறேன். அதோடு நம் அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுமே தற்போது நல்ல அனுபவத்தை பெற்றுள்ளனர். எனவே நிச்சயம் ஒரு சமமான அணியே தேர்வு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now