
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஆனால் அதன்பின் இணைந்த அபிஷேக் சர்மா - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 46 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 100 ரன்களில் அபிஷேக் சர்மா விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களையும், ரிங்கு சிங் 48 ரன்களையும் சேர்க்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைக் குவித்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதேவெரா 43 ரன்களையும், லுக் ஜோங்வா 33 ரன்களையும், பிரையன் பென்னெட் 26 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததன் காரணமாக அந்த அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.