
இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது. இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்கலங்கி நின்றார்கள்.
குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 765 ரன்களை குவித்து ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடியும் கோப்பையை வெல்ல முடியாததால் ஏமாற்றத்தை சந்தித்தார். முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி தன்னுடைய சொந்த சாதனைகளுக்காக சுயநலத்துடன் விளையாடுவதாக சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.
குறிப்பாக 90 ரன்களை எட்டியதும் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக விளையாடாமல் தன்னுடைய சொந்த சாதனையை படைப்பதற்காக விராட் கோலி மெதுவாக சுயநலத்துடன் விளையாடியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் போன்றவர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக தெரிவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா தம்முடைய கேரியரிலும் இது போன்ற விமர்சனங்களை சந்தித்ததாக கூறியுள்ளார்.