
India tour of Australia, 2025: ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே நவம்பர் 8ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள 5ஆவது டி20 போட்டியைக் காண ஆஸ்திரேலியாவில் உள்ள அமித் கோயல் எனும் நபர் 880 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி இந்தண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் அக்டோபர் 09ஆம் தேதி முதலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அக்டோபர் 29ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. மேலும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் இரு அணிகளும் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் சிட்னியில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு ஒருநாள் போட்டி மற்றும் நவம்பரில் கான்பெராவில் நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் இத்தொடர் தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ஆஷஸ் டெஸ்ட் தொடரின் டிக்கெட் விற்பனையைக் கட்டிலும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.