
Tilak Varma County Debut: எசெக்ஸ் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹாம்ஷையர் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய திலக் வர்மா தனது முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் எசெக்ஸ் மற்றும் ஹாம்ஷையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. செல்ம்ஸ்ஃபோர்டு கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எசெக்ஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
அந்த அணியில் அதிகபட்சமாக சார்லி அலிசன் சதமடித்ததுடன் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 101 ரன்களையும், மேத்யூ கிரிட்ச்லி 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 71 ரன்களையும் சேர்த்தனர். ஹாம்ஷையர் அணியில் கைல் அபோட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹாமஷையர் அணியில் அலெஸ்டர் ஓர் மற்றும் நிக் கபின்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய அறிமுக வீரர் திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.