TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சந்தோஷ் குமார் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜெகதீசனுடன் இணைந்த பாபா அபாரஜித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்களுக்கும், டேரில் ஃபெரேரியோ 4 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 7 ரன்களிலும் என அடித்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபா அபாராஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியை வலிமையான ஸ்கோரை நோக்கியும் அழைத்துச் சென்றார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் தன்வரும் அதிரடியாக விளையாடினார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் பாபா அபாரஜித் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 72 ரன்களையும், அபிஷேக் தனவர் 3 சிக்ஸர்களுடன் 22 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அந்த அணியின் தொடக்க வீரர் விமல் குமார் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஷிவம் சிங் - கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டினர். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபா அபாரஜித்தும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமாரும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்து வந்த மற்றொரு தொடக்க வீரரான ஷிவம் சிங்கும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
அப்போது 12 ரன்கள் சேர்த்திருந்த சரத்குமார் தனது விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சுபோத் பாடி 14 ரன்களையும், தினேஷ் ராஜ் 4 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முன்னேறி அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now