
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரின் 9ஆவது சீசன் நோற்று முதல் தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனப்டி களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணியில் தொடக்க வீரர் அமித் சாத்விக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜ்குமாரும் 14 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த துஷார் ரஹேஜா - பிரதோஷ் பால் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ரஹேஜா அரைசதம் கடந்த நிலையில், பிரதோஷ் பால் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சசிதேவ் 7 ரன்களுக்கும், முகமது அலி 12 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜாவும் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என 79 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அபிஷேக் தன்வர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரேம் குமார், லோகேஷ் ராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.