
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று கோவையில் நடைபெற்ற 6அவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சூப்பர் கில்லிஸ் அணியின் தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 2 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆசிக் மற்றும் கேப்டன் அபாரஜித் இணை விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் ஆசிக் அரைசதம் கடந்து அசத்த, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களைத் தாண்டியது. அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என் 41 ரன்களில் அபாரஜித்தும், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 54 ரன்களில் ஆசிக்கும் தனது விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த விஜய் ஷங்கர் மற்றும் ஸ்வப்நில் சிங் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அணியை வலுவான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் ஷங்கர் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களைக் குவித்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் யுதீஷ்வரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.