
திருநெல்வேலி: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வீரர்கள் பாபா அபாரஜித், விஜய் சங்கர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 5 ரன்னிலும், மொஹித் ஹரிஹரன் 25 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் விஜய் சங்கர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர்.
பின் இருவரும் தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களில் அரைசதங்களையும் பூர்த்தி செய்து அசத்தினர். பின்னர் மூன்றாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்த நிலையில் ஒரு பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 63 ரன்களைச் சேர்த்திருந்த அபாரஜித்தும், 6 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 59 ரன்களைச் சேர்த்த கையோடு விஜய் சங்கரும் தங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்தது. திருச்சி தரப்பில் ஆதிசயராஜ், கனேஷ் மூர்த்தி, சரவண குமார், ஈஸ்வரன் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.