
டிஎன்பிஎல் 2025: திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பேட்டிங்கில் 83 ரன்களையும், பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கௌசிக், சஞ்சய் யாதவ், ராஜ்குமார் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான வசீம் அஹ்மத் 36 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜாஃபர் ஜமால் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்களுடன் 33 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறினர். இதன் காரணமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பெரியசாமி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.