
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் மறைந்த முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் டிராவிஸ் ஹெட் 42 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த 23ஆவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.