
இந்தியா தலைமையேற்று நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது. இதில் அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. எனவே, கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கும் நிலையில், தினம் தினம் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, உலகக் கோப்பை அணிகள் தங்கள் நாட்டின் பிரத்யேக ஜெர்சியை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியினை அடிடாஸ் நிறுவனம் பிரத்யேகப் பாடலுடன் இன்று வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், "1983ஆம் ஆண்டு தீப்பொறியைப் பற்ற வைத்தது. 2011ம் ஆண்டு பெருமையைக் கொண்டு வந்தது. 2023ஆம் ஆண்டு கனவின் தொடக்கத்தைக் குறிக்கிறது" எனப் பதிவிடப்பட்டுள்ளது.