
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து யு19 மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய யு19 மகளிர் அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டேவினா பெர்ரின் - ஜெமிமா ஸ்பென்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேனினா பெர்ரின் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ஜெமிமா ஸ்பென்ஸ் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ட்ரூடி ஜான்சனும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் பெர்ரினுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் அபி நோர்குரோவ் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெவினா பெர்ரின் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அவருடன் சேர்ந்து விளையாடி வந்த அபி நோர்குரோவும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் அமு சுரேன்குமார் 14 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 ரன்களுக்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.