
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஜி கமலினி - கோங்கடி த்ரிஷா இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களைச் சேர்த்திருந்த ஜி கமலினி தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களமிறங்கிய சனிகா சால்கேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த த்ரிஷா தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
இதன்மூலம் மகளிர் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் வீராங்கனை எனும் வரலாற்று சாதனையையும் த்ரிஷா பதிவுசெய்தார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த த்ரிஷா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 110 ரன்களையும், சனிகா சால்கே 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் இந்திய யு19 மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில் 208 ரன்களைக் குவித்தது.