
மகளிர் அண்டர்19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோலா லம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்களையும், ஜன்னத்துல் மௌவா 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச யு19 அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் வைஷ்னவி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையடைய இந்திய யு19 அணிக்கு கோங்கடி த்ரிஷா - ஜி கமலினி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் த்ரிஷா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீராங்கனை கமலினி 3 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.