
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது இன்று கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கனடா அணியானது நவ்நீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரது அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 194 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக நவ்நீத் தலிவால் 61 ரன்களையும், நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து கடின இலக்கை துரத்திய அமெரிக்க அணியின் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் மொனாங்க் படேல் 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனையடுத்து இணைந்த ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.
இதில் ஆண்ட்ரிஸ் கஸ் 65 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அமெரிக்க அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடா அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், தங்களது முதல் உலகக்கோப்பை தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
— Reeze-bubbly fan club (@ClubReeze21946) June 2, 2024