
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நிறைவடைந்துள்ளது. இத்தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு வீரர்களும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர். அதேசமயம் ஒரு சில நட்சத்திர வீரர்கள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளனர். அந்தவகையில் இதில் முதலிடம் பிடிப்பராக ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த கிளென் மேக்ஸ்வெல் 10 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 52 ரன்களையும், பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளையும் மட்டுமே கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக அணிக்கு தேவைப்படும் நேரங்களில் கூட ரன்கள் ஏதுமின்றியும், அல்லது அதிக பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் அடிக்க முடியாமலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் கிளென் மேக்ஸ்வெல் இடம்பிடித்துள்ளதால் அவருடைய தற்போதைய ஃபார்ம் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் ஃபார்ம் ஒன்றும் பெரிதல்ல, எனவே மேக்ஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அந்த அணி வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.