இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய பும்ரா; வருண் சக்ரவர்த்திக்கு இடம்!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில், அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி பங்கேற்கு தொடர் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது காயமடைந்த பும்ரா, அதன்பின் தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இருப்பினும் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பையை கருத்தில் கொண்டு இங்கிலாந்து ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். இருப்பினும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததன் காரணமாக தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதையடுத்து இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
Varun Chakravarthy replaces Jasprit Bumrah in India's squad for England ODIs!#INDvENG #TeamIndia #JaspritBumrah #Cricket pic.twitter.com/Enl7lIkLEC
— CRICKETNMORE (@cricketnmore) February 4, 2025
முன்னதாக இங்கிலாந்து டி20 தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், இந்திய அணி தொடரை வெல்வதற்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தார். இதன் காரணமாக இத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் அவர் வென்றார். இந்நிலையில் அவர் ஒருநாள் அணிக்கு தேர்வாகியுள்ளதால், வருண் சக்ரவர்த்தி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி*, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா.
Win Big, Make Your Cricket Tales Now