
இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என்று அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் 5 ஐபிஎல் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் என்று சென்னை அணிக்காகவும் கேப்டனாக சாதித்து காட்டியுள்ளார். சென்னை அணிக்காக 14 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி, தமிழ்நாட்டின் தத்துப் பிள்ளையாக மாறிவிட்டார்.
எப்போதெல்லாம் தோனி சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் ரசிகர்களுக்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். ரசிகர்களிடையே தோனியின் மாஸ் குறையாததால், அவரின் விளம்பர வருவாயும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை தோனி சேர்த்து வைத்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் கணக்கிட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் விவசாயம், முதலீடுகள், விளையாட்டு அணிகள், சினிமா என்றும் தோனி பல்வேறு துறைகளில் கால்பதித்து வருகிறார். அதேபோல் கிரிக்கெட் விளையாடுவதில் தோனி எவ்வளவு ஆர்வம் காட்டுவாரோ, அதே அளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது பிரியம் கொண்டவர். இதனை தோனி பல்வேறு முறை வெளிப்படுத்தியுள்ளார். உலகின் முன்னணி இரு சக்கர வாகனங்களை வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார். அந்த வாகனங்களின் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.