
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இன்று மும்பை மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்த இந்திய அணி, பந்துவீச்சில் வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி, 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நல்ல ரன் ரேட் உடன் முதல் இடத்திற்கு முன்னேறியதோடு, முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியிருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளோம் என்பதை கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இதைத்தான் எங்களுடைய முதல் இலக்காக வைத்திருந்தோம். அதே சமயத்தில் நாங்கள் முதல் ஏழு ஆட்டங்களை விளையாடிய விதம் மிக சரியாக இருந்தது. மேலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் வந்து கைகளை உயர்த்தி சிறப்பாக செயல்பட்டார்கள்.
பேட்டிங்கில் நாங்கள் ரன்களை குவித்து செயல்படுவது சவாலாக இருந்தது. நாங்கள் இப்போது எடுத்த ரன்கள்தான் நாங்கள் குவிக்க விரும்பும் டெம்ப்ளேட். இந்த ரன்களை குவித்ததற்கு பேட்ஸ்மேன்களுக்கும் மற்றும் விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பெருமை சேரும். ஸ்ரேயாஸ் மனதளவில் மிகவும் வலிமையான வீரர். அவர் தனது விளையாட்டில் மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். இன்று நாம் அவர் எப்படிப்பட்டவர் என்று அவருடைய திறமையை பார்த்தோம்.