
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்திர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மேலும் மழை காரணமாக இப்போட்டியானது 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹெஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் பால் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான துஷார் ரஹேஜாவும் 15 ரன்னிலும், பாபா இந்திரஜித் 27 ரன்னிலும், விஜய் சங்கர் 16 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 68 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் மற்றும் முகமது அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் சதத்தைப் பதிவுசெய்ய, அவருடன் இணைந்து முகமது அலியும் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 216 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 13 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 132 ரன்களையும், முகமது அலி 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 76 ரன்களையும் சேர்த்தனர்.