
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் மூன்று நாட்களில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்து அசத்தினார். தன்னை தொடக்க வீரர் இடத்தில் இருந்து மூன்றாவது வீரராக தானே கீழே இறக்கிக் கொண்ட இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.
தற்பொழுது இவர்கள் இருவர் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து நாங்கள் கில்லை முடிவு செய்ய மாட்டோம். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. அவரால் அணிக்கு மிக நன்றாக செயல்பட முடியும். ஏனென்றால் அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது. அவர் தனது நேரத்தை எடுத்து விளையாடலாம். அவர் ஒரு ஸ்ட்ரோக் பிளேயர். ஆட்டத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடியவர். அப்படிப்பட்ட ஒருவர் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருப்பது அணிக்கு நல்ல விஷயம்.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் எடுத்துள்ளார். சில நேரங்களில் சில கிரிக்கெட் வடிவங்களில் ரன்கள் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆகலாம். அவருக்கு நேரம் இருக்கிறது. அவர் நேரத்தை எடுத்துக் கொள்கிறார். அவரிடம் இருக்கும் திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அவர் இந்திய அணியின் எதிர்காலம். அவர் நீண்ட காலம் விளையாடுவார்.