இது விராட் கோலியின் 500ஆவது போட்டியா? - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று இரவு தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் விராட் கோலி தனது 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணிக்காக சச்சின், ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகிய 3 பேர் மட்டுமே இதுவரை 500 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
இதுவரை விராட் கோலி 110 டெஸ்ட் போட்டிகளிலும், 274 ஒருநாள் போட்டிகளிலும், 115 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளார். இதனால் 500ஆவது போட்டியில் களமிறங்கும் விராட் கோலிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில், “இந்தப் போட்டி விராட் கோலியின் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பது தெரியாது. எண்களை நினைவு வைத்துக் கொள்வதில் நான் சிறந்தவன் இல்லை. விராட் கோலியின் இந்த சாதனை, இந்திய அணி வீரர்களுக்கே பெரும் ஊக்கத்தை அளிக்கும். அதேபோல் இந்திய மக்களுக்கும் ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விராட் கோலி யார் என்பதை அவரின் ஆட்டமும், அடித்துள்ள ரன்களுமே சொல்லும். அவையனைத்தும் இருந்தாலும், என்னை பொறுத்தவரை விராட் கோலியின் முயற்சியும், பயிற்சியும் தான் ஆச்சரியமாக உள்ளது. யாருமே பார்க்காத இடத்திலும், அவர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அதுதான் அவர் 500 போட்டிகளில் விளையாட காரணமாக இருப்பதாக நினைக்கிறேன். இது சாதாரணம் கிடையாது.
ஏனென்றால் 500 போட்டிகளுக்கு பின் கணக்கிட முடியாத உழைப்பும், தியாகமும் அவர் வாழ்க்கையில் உள்ளது. அதனை அவர் தொடர்ந்து செய்வார் என்று நம்புகிறேன். ஒரு பயிற்சியாளராக விராட் கோலியின் இந்த சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. ஏனென்றல் விராட் கோலியை பார்த்து இன்னும் ஏராளமான இளைஞர்களும் ஊக்கம் பெறுவார்கள். அதற்காக தயாராக தொடங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now