
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் இந்திய அணி பிரச்சனையில் சிக்கும் போதெல்லாம், விராட் கோலி இந்திய அணியை மீட்டு வருகிறார்.
இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் உட்பட 354 ரன்களுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அத்தனை பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, விராட் கோலி கடைசி வரை நின்று வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக 3 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இதன்பின் அந்த ஓவரை நிறைவு செய்வதற்காக கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியை அழைத்தார். இதன்பின் 3 பந்துகளை வீசிய விராட் கோலி 2 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து அட்டாக்கில் இருந்து வெளியேறினார். திடீரென விராட் கோலி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.