சச்சினின் சாதனையை தகர்த்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 5,000 ரன்கள் அடித்த 4ஆவது வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் என்ற மெகா இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட் வைத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சுமாராக செயல்பட்டு முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ரஹானே 89, ரவீந்திர ஜடேஜா 48, சர்துள் தாக்கூர் 51 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய ரன்களை எடுத்து போராடி ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மீண்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 270/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.
Trending
அதைத் தொடர்ந்து வரலாற்றில் எட்டப்படாத உலக சாதனை இலக்கை துரத்த துவங்கிய இந்தியாவுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் ஷுப்மன் கில் 18 ரன்களில் அவுட்டானது இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. இருப்பினும் மறுபுறம் நிதானமாக செயல்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்கள் எடுத்திருந்த போது தேவையின்றி ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்து நேத்தன் லையன் சுழலில் சிக்கினார்.
அதை விட அடுத்த ஓவரிலேயே புஜாராவும் தேவையற்ற ஷாட் அடித்து 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 93/3 என சரிந்த இந்தியாவை 4ஆவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடி வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 44 ரன்களும் முதல் இன்னிங்ஸில் காப்பாற்றிய ரஹானே 20 ரன்களும் எடுத்த போது 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தற்போதைய நிலைமையில் 164/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆஸ்திரேலியா வெல்ல 7 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. எனவே இன்றைய நாளில் 97 ஓவர்களில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்து இந்தியா கோப்பையை முத்தமிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் கடைசி நாளில் எப்போதுமே பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக இருக்கும் என்பதால் 7 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று அந்த அணி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை எப்படியாவது 97 ஓவர்கள் உடம்பில் அடிவாங்கியாவது போட்டியை டிரா செய்து விடுங்கள் என்பதே இந்திய ரசிகர்களின் கடைசி கோரிக்கையாக இருக்கிறது.
ஆனால் சாதாரணமாகவே டிரா என்ற பேச்சுக்கிடமில்லை வெற்றி மட்டுமே தம்முடைய இலக்கு என்ற கோட்பாட்டுடன் கேப்டன்ஷிப் செய்த காலங்களில் எதிரணிகளை மிரட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி இப்போட்டியில் இந்தியாவை போராடி வெற்றி பெற முயற்சிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.
அதை விட இந்த போட்டியில் எடுத்த 14, 44 ரன்களையும் சேர்த்து ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் விராட் கோலி உடைத்துள்ளார். கடந்த 2011 உலகக் கோப்பையில் தொடங்கி 2014, 2016 டி20 உலக கோப்பைகளில் அடுத்த அடுத்த தொடர் நாயகன் விருது வென்ற அவர் படைத்துள்ள அந்த சாதனையின் பட்டியல் இதோ:
- விராட் கோலி : 660 (18 இன்னிங்ஸ்)
- சச்சின் டெண்டுல்கர் : 657 (14 இன்னிங்ஸ்)
- ரோஹித் சர்மா : 620 (17 இன்னிங்ஸ்)
- சவுரவ் கங்குலி : 514 (8 இன்னிங்ஸ்)
- யுவராஜ் சிங் : 457 (14 இன்னிங்ஸ்)
அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 5,000 ரன்கள் அடித்த 4ஆவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர் : 6,707, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
- சச்சின் டெண்டுல்கர் : 5,108, இலங்கை எதிராக
- டான் ப்ராட்மேன் : 5,028, இங்கிலாந்துக்கு எதிராக
- விராட் கோலி : 5,000*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
Win Big, Make Your Cricket Tales Now