
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஆசியாவில் வேகமாக 16000 ரன்கள் எடுத்தவர்
இப்போட்டியில் விராட் கோலி அரைசதம் கடந்ததன் மூலம், ஆசியாவில் தனது 16,000 ரன்களை பூர்த்தி செய்ததுடன், அதிவேகமாக இந்த மைல் கல்லை எட்டிய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 353 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டிய நிலையில், தற்போது விராட் கோலி 340 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி அசத்தியுள்ளார்.