-lg1-mdl.jpg)
பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்த விராட் கோலி 9 பந்துகளை சந்தித்த நிலையிலும் அதில் ஒரு ரன் கூட எடுக்காமல் 0 ரன்னில் வில்லியம் ஓ ரூர்க் பந்தில் கிளென் பிலிப்ஸ் அருமையான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இப்போட்டியில் டக் அவுட்டானதன் மூலம் விராட் கோலி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை 536 சர்வதேச போட்டியில் விளையாடிய விரட் கோலி, 38ஆவது முறையாக ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்துள்ளார். அதேசமயம் ஹர்பஜன் சிங் தனது சர்வதேச கிரிக்கெட் கேரியரில் 37 முறை ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.