
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸின் அதிரடியான தொடக்கத்தின் மூலம் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 112 ரன்களைக் குவித்தது.
அதிலும் குறிப்பாக தனது அறிமுக ஆட்டத்தில் விளையாடிய சாம் கொன்ஸ்டாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 52 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் மொத்தமாக 64 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட கொன்ஸ்டஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்துள்ள மார்னஸ் லபுஷாக்னேவும் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து வருவதுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாம் கொன்ஸ்டாஸிடம் வம்பிழுத்த விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய கொன்ஸ்டாஸ், இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜுக்கு எதிராக பவுண்டரிகளை விளாசித் தள்ளினார்.