
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணியானது முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியானது இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் உள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொடரின் முதல் போட்டியில் காயம் காரண்மாக விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இரண்டாவது போட்டியில் விளையாடிய நிலையில் அதில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.