
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பேற்றிருந்த இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவுள்ளன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 2 இடத்தை உறுதிசெய்துள்ள நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி வெற்றிபெற்று முதலிரண்டு இடங்களை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் விராட் கோலி 24 ரன்களை எடுக்கும் பட்சத்தில் அவர் ஆர்சிபி அணிக்காக 9000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக 9ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் படைக்கவுள்ளார்.