
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீச முடிவு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
ஆனால் டாஸை இழந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. ஏனெனில் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் ரன்கள் ஏதுமின்றியும், நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். முன்னதாக கடந்த தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர், அதன்பின் இங்கிலாந்து தொடரில் இருந்து தனிபட்ட காரணங்ளினால் விலகினார்.