
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் கட்டத்தை விட இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் இத்தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவுள்ளனர்.
இதற்கு காரணம் இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது. இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் பேட்டர்கள் சொதப்பியதற்கு காரணம் அவர்கள் உள்ளூர் போட்டிகளை தவிர்த்து வருவது தான் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. அதில் மிக முக்கியானது அனைத்து வீரர்களும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.