
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அகமதாபாத் நகரில் நடந்த ஒருநாள் தொடரை போலவே இதிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டி20 தொடரை வென்று பதிலடி கொடுக்க கிரண் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிரமாக போராடும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு புதிய உலக சாதனையை படைப்பதற்கு மிகப் பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதாவது இந்த டி20 தொடரில் விராட் கோலி இன்னும் 73 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்டராக புதிய உலக சாதனை படைப்பார்.