
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால் டாஸ் போடப்பட்ட பின் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. நீண்ட நேரம் காத்திருந்த நடுவர்கள், பின்னர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதனால் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் அடுத்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்துள்ளது.
நாளை நடக்கவுள்ள உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் விளையாடவுள்ளன. இதற்காக தனி விமானத்தில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் கூடியிருந்த இந்திய அணி ரசிகர்கள் ஒன்றுகூடி வீரர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.