
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த மாதம் தொடங்கியது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளனர். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலிரண்டு போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களால் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகியிருந்தார். இதையடுத்து அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான தகவலின்படி மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்றும், தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது.