
துபாயில் கோலாகலமாக நிறைவு பெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை வாங்குவதற்காக அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பட் கமின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடிக்கு வாங்கப்பட்ட முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகளை கொட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார். ஆனால் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்களை இப்படி கோடிகளைக் கொட்டி ஐபிஎல் அணிகள் வாங்கியது இந்திய ரசிகர்களுக்கு உள்ளுக்குள் வலியை கொடுப்பதாகவே அமைந்தது.