
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் அந்த அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் தோல்வியைத் தழுவியது.
அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செயத் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 243 ரன்களைக் குவித்து அசத்தியது. பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையிலும், அந்த அணியால் 232 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மீதான விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் ஷுப்மான் கில்லின் கேப்டன்சி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அவர் சிறப்பாக கேப்டனாக செயல்படவில்லை என்றும், அவர் அதற்கு தயாராக இல்லை என்றும் சேவாக் கூறியுள்ளார்.