
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டுவருகிறார். ரவி சாஸ்திரிக்கு பின் ராகுல் டிராவிட் இப்பொறுப்பை ஏற்றார். ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் இருந்த நிலையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் மீது பயிற்சியாளராக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்திய அண்டர் 19 பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தபோதுதான் 2018ஆம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையிலான அண்டர் 19 அணி உலக கோப்பையை வென்றது. பிரித்வி ஷா, இஷான் கிஷன், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகிய சிறந்த இளம் வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கி கொடுத்ததுடன், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், மயங்க் அகர்வால் ஆகிய வீரர்களை இந்திய அணிக்கு தயார்படுத்தி அனுப்பினார்.
அதனால் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக 2021 டி20 உலக கோப்பைக்கு பின் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி பெரிதாக சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய தொடர்களிலும் தோல்வியை தழுவி ஏமாற்றமளித்தது இந்திய அணி.