
2023 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் செயல்படுவார் என்ற தகவலை பிசிசிஐ கசிய விட்டுள்ளது . இது நிரந்தரமான பதவியா? அல்லது தற்காலிக பதவியா? என்பது ராகுல் டிராவிட் கையில் தான் உள்ளது. உலகக்கோப்பை முடிந்த பின் டிராவிட் தன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு விடை பெறவும் வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வீரர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் இரண்டாவது வாரம் வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி இருப்பார்கள் என்பதால் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தற்போது அணியில் விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு நீண்ட ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. அதற்கு பதில் இளம் வீரர்கள் கொண்ட அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும்.
அதே போல பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ. ஆனால், இதில் ஒரு முக்கிய விஷயமும் உள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் நிறைவு பெறுகிறது. இந்தியா உலகக்கோப்பை தொடரில் எந்த இடம் வரை செல்கிறது என்பதை பொறுத்து அவரது ஒப்பந்தம் நீட்டிப்பதா? அல்லது அவருக்கு விடை கொடுப்பதா? என பிசிசிஐ முடிவு செய்யும்.