
டெஸ்ட் தொடர்களை பொருத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும் . அந்த வகையில் இருக்கின்ற மற்றொரு தொடர்தான் பார்டர் கவாஸ்கர் கோப்பை என்று அழைக்கப்படும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் .
தற்போது ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது வருகின்ற 9ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது . இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் இருக்கின்றனர் .
இந்திய அணியை பொறுத்தவரை இந்தத் தொடரில் அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது டெஸ்ட் போட்டியில் நல்ல ஃபார்மில் இருந்த ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம்பெறாதது ஆகும் . கடந்த வருடம் முதலாக மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை இவர்கள் இருவரும் அளித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர்கள் விட்டுச் சென்றுள்ள இடத்தை நிரப்புவதற்கு பொருத்தமான வீரர்கள் யார் என்று கிரிக்கெட் விமர்சகர்களிடம் கேள்வி எழுந்திருக்கிறது .