
ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ஹாபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைக் குவித்தது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் 36 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங், ஜான்சன் சார்ல்ஸ், ஜேசன் ஹோல்டர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 20 ஓவர்களில் 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
முன்னதாக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த டேவிட் வார்னர், பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து அவர் வரவுள்ள டி20 தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறவுள்ளதாக இன்றைய போட்டிக்கு பின் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.